கைதிகளுக்கு பொதுமன்னிப்புத் திட்ட செயலணி குழு; சிபார்சு குழுவின் அறிக்கையில் அரசியல் கைதிகள் குறித்து குறிப்பு எதுவுமில்லை

சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் கொள்கைத் திட்ட செயற்பாட்டுக் குழுவின் அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.  

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகள் அதிகரித்துள்ளதுடன், அங்கு நிலவிவரும் நெருக்கடித்தன்மையை குறைத்துக்கொள்வதற்காக விசேட பொறிமுறையின் ஊடாக பொது கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான வேலைத்திட்டமொன்று சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சராகவிருந்த வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்கவை தலைவராகக் கொண்ட குழுவினரால் ஆராயப்பட்டு வகுக்கப்பட்ட கொள்கைத் திட்ட அறிக்கை அமைச்சரான அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.  

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி,  

“சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற கோட்பாட்டின்படி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்.  

அவர்கள், சமூகத்தினரால் ஒதுக்கப்படாது சமூகத்தினருடன் ஒன்றிணைந்து வாழ்வதை விரும்புகிறார்கள். விடுவிக்கப்பட்டவர்கள் சமூகத்துக்குள் விமர்சிக்கப்படாதிருக்க வேண்டும்” என்றார். இந்த கொள்கைத் திட்டத்தின் ஊடாக அரசியல் கைதிகள் விடுக்கப்படுவார்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த நீதி அமைச்சர்,  

இல்லை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள். இக் குழுவினரால் ஆராயப்பட்டு வகுக்கப்பட்ட கொள்கைத் திட்ட அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் திட்டம் இல்லை.  

அரசியல் கைதிகளுடன், தீவிரவாதம், பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களை புரிந்த சிறைக்கைதிகள் இந்த பொது மன்னிப்பு கொள்கைத் திட்ட செயற்திட்ட அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை.  

சிறு சிறு குற்றங்களை புரிந்தவர்கள், நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிப்பர்களை விடுதலை செய்வதற்கு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த அறிக்கை அமைச்சரவை அங்கீகாரம் பெற்றதும் செயற்படுத்த எண்ணியுள்ளோம். அதன்படி, தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு பின்னர் தெரிவுசெய்யப்பட்ட 8000 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவர்” என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 04/01/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை