துறைமுக நகர ஆணைக்குழு: மனு மீதான பரிசீலனை இரண்டாம் நாளாக தொடர்கிறது

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்த தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை உச்சநீதிமன்றத்தினால் இன்றைய தினம் (20) மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (19) இம்மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேலதிக பரிசீலனை இன்றைய தினத்துக்கு ஒத்திப்போடப்பட்டது.  

நேற்றைய தினம் இம்மனு மீதான பரிசீலனை ஆரம்பமாவதற்கு முன்பதாக திறந்த நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மேற்படி சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பெருமளவு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியுள்ள நிலையில் அனைத்து சட்டத்தரணிகளுக்கும் வாதங்களை முன்வைப்பதற்கு இருபது நிமிடங்கள் முதல் 30நிமிடங்கள் வரையிலான காலம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். அதனையடுத்து மனுதாரரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணகேஸ்வரன் விடயங்களை முன்வைத்தார். அதன்போது அவர்  உத்தேச சட்டமூலத்தின் மூலம் நாட்டு மக்களின் இறைமை பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  

மாற்று கொள்கைக்கான மத்திய நிலையம், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி. மற்றும் சிவில் சமூக குழுக்கள் உட்பட பல தரப்பினரால் 19மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

குறித்த ஆணைக்குழுவை நிறுவுவது மூலம் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சவால் செய்வதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமாகவும், பொது வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 04/20/2021 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை