ஏப்ரல் மாத சம்பளத்துடன் ஆயிரம் ரூபா அதிகரிப்பு

- புதுவருட பிறப்பிற்கு தொழிலாளருக்கு மகிழ்ச்சியான செய்தி
- சம்பள அதிகரிப்புக்கு எதிராக 20 தோட்டக்கம்பனிகள்  இணைந்து செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தமை பாரிய வெற்றி

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். எதிர்வரும் 10ஆம் திகதி  தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கப்படவுள்ள நிலையில் அந்த சம்பளத்துடன் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என உறுதியாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இம்முறை தமிழ் - சிங்கள புத்தாண்டை தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை எண்ணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தன.

20 தோட்டக் கம்பனிகள் ஒன்றிணைந்து மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே 5ஆம் திகதி மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையிலேயே நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி சம்பளத்துடன் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவது உறுதி என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தின் வர்த்தமானி வெளியிடப்பட்ட மார்ச் 5ஆம் திகதி முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மார்ச் மாதத்தின் சம்பள அதிகரிப்பு நிலுவையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை