பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊவாவில் அதிபர், ஆசிரியர் கவனயீர்ப்பு போராட்டம்

ஊவா மாகாண அதிபர், ஆசிரியர்கள் சம்பள பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மாகாண சபைக்கு முன்பாக நேற்றைய தினம் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

24வருட காலமாக நிலவிவரும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுதருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.  

 ஊவா மாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்று மீளவும் மாகாண சபையை நோக்கி திரும்பியது.  

இதனால' இப்பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் 2மணித்தியாலங்களுக்கு மேலாக அனைத்து வாகனப்போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.  

1997மற்றும் 2006ஆகிய வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பளத்திட்டத்தை அமுல்படுத்தப்படாமையை கண்டித்தும் அதிபர், ஆசிரியர் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமை, கொவிட் 19குறித்து முழுமையான வசதிகள் பாடசாலைகளுக்கு செய்துக்கொடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஊவா மாகாண அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை பெற்று இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர். பாடசாலைக்கு வருகைத் தந்த மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பாடசாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.  

போராட்ட நிறைவில் அதிபர், ஆசிரியர்கள் தாம் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட மகஜரொன்றை ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர், ஊவா சுழற்சி நிருபர் 

Wed, 04/07/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை