இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயம்

இந்தோனேசியக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியின் வடக்குக் கரைக்கு அப்பால் சுமார் 90 கிலோமீற்றர் தூரத்தில் கடந்த புதனன்று அந்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அதில் கடலோடிகள் 53 பேர் இருந்தனர். நீரில் மூழ்க அனுமதி வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அந்தக் கப்பலுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

"கடற்படை தற்போது அந்த நீர்மூழ்கிக் கப்பல்லை தேடிக் கொண்டிருக்கிறது. கப்பல் காணாமல் போன பகுதி குறித்து நாங்கள் அறிவோம். அப்பகுதி கொஞ்சம் அதிக ஆழமானது" என முதல் நிலை அட்மிரல் ஜூலியல் விட்ஜோஜோனோ ஏ.எப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.

ஆழமான பகுதியில் மூழ்கிச் செல்ல, அந்த நீர்மூழ்கிக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட பின்னர் தான், அக்கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எனவும் சில செய்திகள் வெளியாகி உள்ளன.

கப்பல் மூழ்கிய இடத்துக்கு அருகே சில பகுதிகளில் எண்ணெய்க் கசிவு தென்படுகிறது. ஆனால், அது காணாமல் போன கப்பலில் இருந்துதான் கசிந்துள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

தேடல் மீட்புப் பணியில் அதிகமான கப்பல்களை ஈடுபத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஜெர்மனி, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் தேடல் பணிகளில் உதவ முன்வந்துள்ளன.

இந்நிலையில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பலில் ஒட்சிசன் தீர்ந்து வருவதால் அதில் உள்ள 53 பேரையும் மீட்பதற்கு 72 மணி நேரம் அவகாசமே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய நாடு இயக்கிக் கொண்டிருந்த ஐந்து நீர் மூழ்கிக் கப்பல்களில் ஒன்று இது.

Fri, 04/23/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை