ஜோர்ஜ் பிளொயிட் கொலை வழக்கு; பொலிஸார் குற்றவாளியாக தீர்ப்பு

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஜோர்ஜ் பிளொயிட் கொல்லப்பட்டது தொடர்பில், முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரக் சொவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு 24 மணி நேரத்துக்குள் அந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மினியாபொலிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியாக இருந்த சொவின், கறுப்பின ஆடவர் பிளொயிட்டை கைது செய்தார். சுமார் 9 நிமிடங்களுக்கும் கூடுதலாக பிளொயிட்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

அந்தச் சம்பவத்தின் வீடியோ உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மூன்று குற்றச்சாட்டுகளில் சொவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை குறித்து அறிவிக்கப்படும் வரை சொவின் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பல தசாப்தங்கள் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சொவின் மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த வழக்குக்குக் கிடைத்த அதீத ஊடக வெளிச்சம் அரசுத் தரப்பு நீதிபதிகள் குழு மீது தாக்கம் செலுத்தி இருக்கலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் டெரெக் சொவின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்படலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தத் தீர்ப்பை அடுத்து நீதிமன்றத்திற்கு வெளியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கரகோசம் இட்டு மகிழ்ச்சியை வெளியிட்டனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் தீர்ப்பு வெளியானதும் ஜோர்ஜ் பிளொயிடின் குடும்பத்தினருடன் பேசினர்.

“குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் நிறைய செய்ய உள்ளோம். அமைப்பு ரீதியான இனவெறியைக் கையாள்வதில் இது முதல் அடியாக இருக்கும்” என்று ஜனாதிபதி பைடன் அவர்களிடம் கூறுவதைக் கேட்க முடிகிறது.

Thu, 04/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை