பாகிஸ்தானில் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சம்

பாகிஸ்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றினால் முதல் முறை ஒரே நாளில் இரு நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் கண்டிப்பான பொது முடக்கநிலை பற்றி ஆலோசித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் செவ்வாயன்று 201 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மொத்த எண்ணிக்கை 17,530 என உயர்ந்திருப்பதாக கொரோனா தொற்று தொடர்பில் கண்காணிக்கும் தேசிய கட்டளை செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி 157 பேர் உயிரிழந்ததே பாகிஸ்தானில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் பதிவான அதிக உயிரிழப்பாக இருந்தது.

கடந்த செவ்வாயன்று 5,292 புதிய தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில் அந்நாட்டின் மொத்த தொற்று சம்பவங்கள் 810,231 ஆக உள்ளது. இந்நிலையில் சுகாதார கட்டமைப்பு நிலைகுலையும் அச்சுறுத்தல் பற்றி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் வென்டிலேட்டர்கள் மற்றும் ஒட்சிசன் போதுமான அளவில் கிடைக்கப்பெறாத நிலையில் சுகாதார வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது.

தற்போது 631 மருத்துவமனைகளில் 6,286 கொவிட்–19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதான நகரங்களில் உள்ள மருத்துவமனைகளின் 70 வீதத்திற்கும் அதிகமான வென்டிலேட்டர்கள் மற்றும் ஒட்சிசன் படுக்கைகள் நிரம்பி உள்ளன.

Thu, 04/29/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை