உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்ய துருப்புகளை வாபஸ் பெற உத்தரவு

பல வாரங்கள் நீடித்த பதற்றம் தணிவு

உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக அங்கு பதற்றம் நீடித்து வந்த நிலையில் அங்கிருக்கும் துருப்புகளின் சில பிரிவுகளை தமது முகாம்களுக்கு திரும்பும்படி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா மற்றும் உக்ரைன் எல்லையில் 100,000க்கும் அதிகமான ரஷ்ய படையினர் திரட்டப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கணித்துள்ளது.

இந்நிலையில் கிரிமியாவில் உரையாற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு, பயிற்சியில் உள்ள இராணுவப் பிரிவுகள் தமது முகாமுக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக போர் வலயத்தில் தம்மை சந்திக்கும்படி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டிருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் இந்த நடவடிக்கையை அவர் வரவேற்றுள்ளார்.

‘நாட்டுக்காக நம்பகமான பாதுகாப்பை வழங்கும் திறனை துருப்புகள் காட்டியுள்ளன’ என்று குறிப்பிட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், 58 மற்றும் 41 ஆம் இராணுவப் பிரிவுகள் அதேபோன்று பல வான்வழிப் பிரிவுகளும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தமது நிரந்தர முகாம்களுக்கு திரும்பும்படியும் அந்த நடவடிக்கையை மே 1 ஆம் திகதிக்கு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமது நாட்டு எல்லையில் ரஷ்யா துருப்புகளை அதிகரிப்பது பற்றி உக்ரைன் ஜனாதிபதி கடந்த வாரம் ஐரோப்பிய தலைவர்களை அறிவுறுத்தி இருந்தார். ரஷ்ய படைகள் ரொஸ்டோவ், பிரின்ஸ் மற்றும் வொரோனஸ் அதேபோன்று கிரிமியா பிராந்தியங்களை நோக்கி நகர்ந்திருப்பதாகவும் போர் தொழில்நுட்பக் குழுக்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சொய்குவின் உத்தரவைத் தொடர்ந்து நேட்டோ அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘மோதல் நிலையை தவிர்க்கும் எந்த ஒரு நகர்வும் முக்கியமானது’ என்று தெரிவித்தது. எனினும் மேற்கத்தேய இராணுவ கூட்டணி இது பற்றி தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாகவும் அது தெரிவித்தது.

வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ரஷ்யா தொடர்பில் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் மோதல் வெடித்ததை அடுத்து அந்த நாட்டுக்கு சொந்தமான கிரிமியா பிராந்தியத்தை ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்தது. ரஷ்ய ஆதரவு படையினர் உக்ரைனின் லுஹன்ஸ்க் மற்றும் டொனட்ஸ் பிராந்தியத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர்.

கிழக்கு உக்ரைனில் அமுலில் இருக்கும் போர் நிறுத்தம் அண்மைய வாரங்களில் பல முறை மீறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செல் வீச்சில் உக்ரைன் வீரர் ஒருவர் காயமடைந்தார். இங்கு மோதல் வெடித்தது தொடக்கம் சுமார் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Sat, 04/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை