புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தில் சமரசங்கள் செய்யத் தயாரில்லை

- 25 தனித் தமிழ் மாகாண சபை தொகுதிகள்  மலையக மக்களுக்கு உருவாக்கப்பட வேண்டும் 
- செந்தில் தொண்டமான்

தேர்தல் சட்ட மறுசீரமைப்புகளின் போது மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை கடுகளவேனும் குறைத்துக்கொள்ள தயாராக இல்லை என்பதுடன், சமரசங்களின்றி எமது உரிமைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் வென்றெடுப்பதற்காக களப்பணியாற்றுவோமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப  தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த அறிக்கையில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, 

மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை ஆளும் அரசாங்கங்களின் இருந்த போதும் சமரமின்றி இ.தொ.கா. குரல்கொடுத்துள்ளது. பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் வென்றெடுக்கப்பட்டுள்ள எமது அரசியல் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் ஊடாக இழப்பதற்கு நாம் தயாரில்லை. 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தில் நான் உட்பட ஜீவன் தொண்டமான் ஆகியோர் கட்சி சார்பாக கூட்டத்தில் கலந்துக் கொண்டோம். இக்கூட்டத்தில் புதிய   மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்ட முறைமை தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் ஊடாக வெறும் 05மாகாண சபை உறுப்பினர்களை மாத்திரமே மலையக மக்களால் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும். 

கடந்த காலங்களில் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, பதுளையென பல்வேறு இடங்களில் இ.தொ.காவின் தேர்தல் பொறுப்பாளராக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் நியமிக்கப்பட்டிருந்தேன். இந்த சந்தர்ப்பங்களில் இ.தொ.கா பல மாகாண சபைகளில் உறுப்பினர்களை வென்றெடுத்தது. அதனால் நேரடியாக அனைத்து மாவட்டங்களில் களப்பணியாற்றிய அனுபவம் மற்றும் புவியில் ரீதியான தரவுகளின் அடிப்படையில் புதிய தேர்தல் சட்டத்தின் ஊடாக 05மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே முழு மலையக மக்களுக்கு கிடைக்கப்பெறுமென பிரதமர் உட்பட ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எடுத்துரைத்ததுடன், 05மாகாண சபை உறுப்பினர்கள் என்றால் முழு மலையகத்திற்கும் வெறும் 02பாராளுமன்ற பிரதிநிதித்துவம்தான் வெற்றிக்கொள்ள கூடிய சூழ்நிலை அமையும் என்பதையும் ஆணித்தரமான சுட்டிக்காட்டினேன். 

இந்த வரலாற்று தவறு இடம்பெறுவதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம்.

எமது இன்றைய தலைமுறையை போன்று நாளைய தலைமுறையின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். அதனால் 25தனித் தமிழ் மாகாணசபை உறுப்பினர்களை வென்றெடுக்கும் தொகுதிகள் நுவரெலியா, பதுளை உட்பட மலையக மக்கள் பரந்துவாழும் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டுமென தெளிவாக ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு நான் விளக்கப்படுத்தினேன். 

25 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தால் மாத்திரமே 11 அல்லது 12 பாராளுமன்ற உறுப்பினர்களை மலையக மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் எந்த அடிப்படையிலும் சமரசம் செய்துக்கொள்ள தயாரில்லை. புதிய தேர்தல் சட்டத்தில் மலையக மக்களின் உரிமைகளை வெற்றிக்கொள்ள உறுதியாக ஆளும் அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு போராடுவோம் என்பதுடன், நாம் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானதென அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உரிய மறுசீரமைப்புகளை முன்மொழிவதாகவும் உறுதியளித்துள்ளது என்றார்.

Wed, 04/21/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை