இந்திய மீனவர்களின் அத்துமீறல்; இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி

கடற்றொழில் அமைச்சர்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாந்தோட்டை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி, அகில இலங்கை பொது கடற்றொழில் சங்கத்தின் செயலாளர் ரத்ன கமகே மற்றும் ஆழ்கடல் மீன்பிடிபடகு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ருவன் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்ததுடன் இலங்கை மீனவர்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக அரேபிய கடற்பகுதிக்குள் பிரவேசிக்கும் போது இந்திய கரையோர காவல் படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதன்போதுகருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் பல வருடங்களாக இடம்பெற்று வருவதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக தான் ராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சாதகமான முடிவுகளை அடையக்கூடிய விதத்தில் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் அப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமான பெறுபேறுகளைத் தருமெனவும் தெரிவித்தார். குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் காரணமாக வடமாகாணமே அதிகளவு பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான அத்துமீறல்களுக்கு இடமளித்தால் இலங்கையின் கடல் வளம் அழிவடையுமெனவும் சுட்டிக்காட்டினார்.

 

Sat, 04/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை