காஸ் விலை குறித்த எந்த தீர்மானமும் இதுவரை இல்லை

அமைச்சர் பந்துல பாராளுமன்றில் தெரிவிப்பு

காஸ் விலை குறைப்பு அல்லது மாற்றம் குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லையென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். நளின் பண்டார எம்.பி தமது கேள்வியில்,

12 கிலோ நிறைகொண்டு கேஸ் சிலிண்டர் ஒன்று தற்போது 9.5 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 ரூபா விலை குறைப்பை போலியாக செய்துவிட்டு உண்மையாக 250 ரூபாவை அதிகரித்துள்ளனர்.

இந்த விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் விளக்கப்படுத்த வேண்டும். 4 சிலிண்டர்களில் செய்த பணியை தற்போது 5 சிலிண்டர்களில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

கேஸ் சிலிண்டர்களின் நிறையை குறைப்பதும் அதன் விலையை குறைப்பதும் நான் அல்ல. இலங்கையில் கேஸ் உற்பத்தி செய்யும் இரண்டு தரப்பினர் உள்ளனர். அரசு மற்றும் தனியார் தரப்பினர் கேஸ் உற்பத்தியை செய்கின்றனர். இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பது நுகர்வோர் அதிகாரசபையும் உரிய அமைச்சருமாகும். கேஸ் என்பது மக்கள் பயன்படுத்தும் பொருளாகும். அந்த அதிகார சபையும் நிறுவனங்களும் இது குறித்து தீர்மானிக்கும். இங்கு ஏதும் ஊழல் - மோசடிகள் இடம்பெற்றிருந்தால் எமக்கு அறிவியுங்கள். ஆனால், கேஸ் விலை குறைப்பு குறித்து தீர்மானிக்கவில்லை என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 04/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை