சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து சீரானது

சுயஸ் கால்வாயில் இராட்சத கப்பல் சிக்கியதால் அந்தக் கால்வாயில் நெரிசலில் சிக்கிய கடைசிக் கப்பலும் வெளியேறிவிட்டதாக அந்தக் கால்வாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 23 ஆம் திகதி எவர் கிவன் என்ற 400 மீற்றர் நீளம் கொண்ட கப்பல் கால்வாயை அடைத்து நின்றதால் அதன் இரு பக்கமாகவும் 400க்கும் அதிகமான கப்பல்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டன.

இந்நிலையில் கால்வாயில் கப்பல் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்ததாக எகிப்தின் சுயஸ் கால்வாய் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்திருப்பதோடு அதில் கண்டறியப்பட்ட விபரங்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே தரை தட்டியிருந்த எவர் கிவன் கப்பல் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டது.

சுயஸ் கால்வாய் எகிப்துக்கு பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது. அந்த நீர்வழிப் பாதை முடக்கப்பட்டதால் ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Mon, 04/05/2021 - 06:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை