அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானதும் எச்சரிக்கை மிகுந்ததுமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் வாரங்களில் எந்தவொரு நிகழ்வுகள் அல்லது உற்சவங்கள் மற்றும் மக்கள் கூடும் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எச்சரிக்கை மிகுந்த எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள அவர்,

புத்தாண்டு பண்டிகைக்கு முன்பாக நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. புதுவருட கொண்டாட்டங்களுக்கு பின்னர் அது அதிகரித்துள்ளது.

கைத்தொழில் தொழிற்சாலை ஒன்று கொரோனா வைரஸ் கொத்தணியாக இனங்காணப்பட்டுள்ளது. குருநாகல் பகுதியில் அமைந்துள்ள அந்த தொழிற்சாலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை கொழும்பில் வர்த்தக வங்கி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் பிலியந்தலை மற்றும் ரத்கம பிரதேசத்திலும் வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. அதற்கிணங்க நேற்றுமுன்தினம் மீண்டும் 367 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு காலங்களில் மக்கள் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் சட்ட விதிகளை உதாசீனம் செய்துள்ள நிலையில் தற்போது நாட்டு எச்சரிக்கை மிகுந்த சூழலை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

எமது அயல் நாடான இந்தியாவின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை நாம் அனைவரும் அறிந்ததே. நமது நாட்டிலும் அத்தகைய நிலை உருவாகாமல் தடுப்பதற்கு மக்கள் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதுடன் அதற்கான உரிய சட்ட நியதிகளை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய வைரஸ் தொற்று தொடர்பில் தற்போது ஜயவர்தன பல்கலைக்கழகம் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலக நாடுகளில் மூன்றாவது கொரோனா வைரஸ் அலை ஆரம்பமாவதற்கு முன்னரே நாம் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளோம்.

தடுப்பூசிகள் கொள்வனவு இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறும் விடயம் என்பதால் தடுப்பூசி கொள்வனவுகள் தாமதமானாலும் நாம் தீர்மானித்துள்ள அளவு தடுப்பூசிகள் எமக்கு கிட்டுவது உறுதி.

பிசிஆர் மற்றும் எண்டிஜன் உபகரணங்கள் போதுமான அளவு தற்போது உள்ளது. புதிதாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சிடம் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்களுக்கு அது போதுமானதாக இருக்கும்.

சீன தயாரிப்பு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு இதுவரை மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை அனுமதி வழங்கவில்லை.

ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இக்காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

இம்மாத இறுதியில் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவந்த நிலையில் தற்போது 30 ,40 மற்றும் 50 வயது நபர்களுக்கும் வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 04/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை