ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: நைகரில் படையினர் கைது

நைகரில் நேற்று இராணுவ சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபட முயன்ற படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் நியாமியில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி முஹமது பசும் பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் அதிகாலை தொடக்கம் கடுமையான துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டனர்” என்று பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி மாளிகையை அடைந்த இந்த படையினரை ஜனாதிபதி காவல் படை முறியடித்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று அதிகாலை 3 மணி தொடக்கம் கேட்ட துப்பாக்கிச் சத்தங்கள் ஒரு மணித்தியாலம் நீடித்த நிலையில் அமைதி திரும்பியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1960இல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் வரும் வெள்ளிக்கிழமையே அந்நாட்டில் முதல் முறையாக ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/01/2021 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை