அலுவலக ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ரத்து

- புதுவருட விசேட சேவைகள் தொடரும்
- அமைச்சர் திலும் அமுனுகம

அலுவலக ரயில்சேவை உட்பட 30 ரயில் சேவைகளை இன்றும் நாளையும் ரத்துச் செய்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறெனினும் புதுவருட பண்டிகை தினங்களில் தமது ஊர்களுக்கு பயணிப்பவர்கள் மற்றும் ஊர்களிலிருந்து கொழும்புக்கு திரும்பவிருக்கும் பயணிகளை கவனத்திற் கொண்டு வழமைபோன்று விசேட ரயில் சேவைகளை நடத்த உள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்அமுனுகம தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புது வருடத்தையொட்டி விசேட ரயில் சேவைகளை நடத்துவது மற்றும் குறைந்தளவு பயணிகளே ரயில்களில் பயணம் செய்கின்றமை காரணமாக மேற்படி ரயில் சேவைகளை இரத்து செய்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் சில ரயில் சேவைகள் 15ம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சேவையில் ஈடுபடாது என்றும் ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க கொழும்பு கோட்டையில் இருந்து வெயாங்கொட வரையிலான ரயில், மீரிகமையிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்குமான ரயில், கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கன வரைக்குமான

ரயில், கொழும்பு கோட்டையிலிருந்து பொல்காவலை மற்றும் கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை வரையான ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடல்வழி பாதை ரயில்களான கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரைக்குமான ரயில் மற்றும் களுத்துறை யிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்குமான ரயில், அளுத்கமையில் இருந்து காலி வரைக்குமான ரயில், புத்தளம் ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரைக்குமான ரயில் மற்றும் நீர்கொழும்பு புத்தளம் வரையிலான ரயில்களும் இவற்றில் உள்ளடங்குவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து ஹப்புத்தளை வரைக்குமான எரிபொருள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/13/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை