அரசியல் தராதரம் பாராது தண்டனை பாராளுமன்றில் நாமல் தெரிவிப்பு

நாட்டில் உள்ள நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு அரசியல் தராதரம் பாராது தண்டனையை பெற்றுக்கொடுப்போமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விளையாட்டில் ஊக்கமருந்துகள் பயன்படுத்துவதற்கு தடை தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்க முடிந்தும் அதனை தடுக்காது செயற்பட்டவர்கள் இன்று பாராளுமன்றில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். தாக்குதல்களை தடுக்க முடியாதுபோனவர்கள் எம்மீது விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களில் பிரிந்த உயிரிழந்தவர்களை அரசியல் மயப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கை விடுக்கிறேன். நாட்டு மக்கள் இந்த விடயத்தை அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளுடன் நிறுத்த மாட்டோம். உறுதியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனையையும் பெற்றுக் கொடுப்போம்.

மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை கடந்த அரசாங்கத்தின் சில உறுப்பினர்களின் தலையீட்டில் விடுதலைச் செய்திருக்காவிடின் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது. அனைத்து விடயங்களையும் தெரிந்துக் கொண்டே இவர்களை விடுதலைச் செய்திருந்தனர். அப்போது விமர்சனங்களை முன்வைக்காதவர்கள் இன்று எம்மை நோக்கி விரல்களை நீட்டுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் நாம் உறுதியாக அரசியல் தராதரங்கள் பாராது நாட்டில் உள்ள நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம் தண்டனையை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 04/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை