சுகாதார விதிமுறைகளை மீறுவோரை கண்டறிய சிவில் உடையில் பொலிஸார்

நேற்று முதல் கடமையில் என்கிறார் அஜித் ரோஹண

சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை மீறும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சிவில் உடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில பிரதேசங்களில் கொரோனா வைரஸ்  தொற்று பரவும் நிலை காணப்படுகின்றது.இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் பரவலை அடுத்து சிறிய அளவிலான கொவிட் கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது. புதிதாக வைரஸ் கொத்தணி உருவாவதை கவனத்தில் கொண்டு தற்பொழுது பொலிஸார் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளை துரிதமாக விரிவுபடுத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினத்தில் சிவில் உடையில் பொலிஸார் இந்த கடமையில் ஈடுபட்டனர். வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளை பொதுமக்கள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசத்தை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார அதிகாரிகளின் அனுமதி இன்றி பொது மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்தக்கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

Tue, 04/27/2021 - 07:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை