அரசை அவமதிக்கும் வகையில் தோட்ட கம்பனிகளின் செயற்பாடு

பொறுமை எல்லை மீறினால் விளைவுகள் பாரதூரமாகும் - இராதாகிருஸ்ணன்

நீதிமன்றம் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தள்ளுபடி செய்ய முடியாதென வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது அடாவடித் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் தமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளாதாவது,

தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள விடயத்தில் ஆரம்பம் முதலே முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் தோட்ட கம்பனிகளே.அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் அந்த சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க கூடாதென்ற எண்ணத்திலேயே செயற்பட்டு வந்தனர். ஆனால் இன்று இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.நீதிமன்றம் வர்த்தமானி அறிவித்தலை நீக்க முடியாதென தீர்ப்பளித்துள்ள நிலையில் இன்று தோட்ட கம்பனிகள் தொழிலார்களை பழிவாங்குகின்ற செயலில் ஈடுபட்டு வருகின்றது. தற்பொழுது தோட்டங்களில் தோட்டங்களை துப்பரவு செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் தோட்ட நிர்வாகம் மேற்கொள்வதில்லை.

இதன் மூலம் தோட்டங்களை காடுகளாக்கி தனியாருக்கு வழங்குவதற்கு அல்லது சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் ஏற்படுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒரு நாள் சம்பளத்திற்கு எடுக்கப்படுகின்ற தேயிலை கொழுந்தின் எடையையும் அதிகரித்து இருக்கின்றார்கள். இது தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் சுமையாக அமைந்துள்ளது. எனவே தோட்டத் தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்க யாராவது நினைத்தால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் அமைதியாக இருப்பது யாருக்கும் பயந்து கொண்டு என யாரும் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம். எனவே தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் தோட்ட கம்பனிகள் ஒரு சரியான நடைமுறையை பின்பற்றாவிட்டால் தோட்ட நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் பாடம் புகட்ட வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தினகரன் நிருபர் 

 

Fri, 04/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை