உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்; நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்; நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு-Easter Sunday Celebrations-Security Tighten in All Churches

- பாதுகாப்பு அமைச்சு கண்காணிப்பு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதலின் இரண்டாவது ஆண்டை நினைவுகூரும் அதேசமயம், இன்று 4ஆம் திகதி நடைபெறும் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நாடு முழுவதும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் :-

இதற்கமைய நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாருடன் இணைந்து முப்படை வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்களும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிகமாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தேவையேற்படும் பட்சத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிக்கும், பாதுகாப்பு படைகளின் தளபதிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள், உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடும் பக்தர்கள் மற்றும் தேவாலயங்களால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட விழிப்புணர்வு குழுக்கள் மேற்படி உயிர்த்த ஞாயிறு தின கொண்டாட்டங்களின் போது வன்முறை, பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் இது தொடர்பில் ஏதாவது சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டால் அது தொடர்பில் உரிய சட்ட அமலாக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பரிசுத்த வாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் சடங்குகளில் ஈடுபடுவோர் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு தேவாலய சபைகள் மற்றும் சேவையகங்கள் கோரியுள்ளன.

ஸாதிக் ஷிஹான், சுப்பிரமணியம் நிசாந்தன்

Sun, 04/04/2021 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை