லண்டன் தூதரகத்தில் இருந்து மியன்மார் தூதர் வெளியேற்றம்

லண்டனில் உள்ள பிரிட்டனுக்கான மியன்மார் தூதரகத்தை மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டு தூதுவர் கடந்த புதன்கிழமை இரவை தனது காரிலேயே கழித்துள்ளார்.

தம்மை தூதரகத்தில் இருந்து வெளியேறும்படி மியன்மார் இராணுவத்துடன் தொடர்புபட்டவர்கள் கேட்டுக்கொண்டதாகவும், தாம் நாட்டை தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் அவர்கள் கூறியதாகவும் தூதுவர் கியவ் ஸ்வார் மின் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதோடு, அது தொடக்கம் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவியான ஆங் சான் சூச்சியை சிறையில் இருந்து விடுவிக்கும்படி கியவ் ஸ்வார் மின் குரல் கொடுத்து வந்தார்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சம்பவத்தை, 'லண்டன் நகருக்கு மத்தியில் இடம்பெற்ற சதிப்புரட்சி ஒன்று' என்று கியவ் ஸ்வார் மின் வர்ணித்துள்ளார்.

'நான் வெளியேற்றப்பட்டேன். இவ்வாறான சதி ஒன்று நடந்திருக்கக் கூடாது' என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்த செய்தி பரவியதை அடுத்து தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்ததோடு அங்கு பிரிட்டன் பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தூதரக அதிகாரிகள் யாரும் தூதரகத்தில் நுழைந்துவிடாத படி தடுத்து நிறுத்த பொலிஸார் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Fri, 04/09/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை