நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் நிலவுக்கு சென்றவர் மரணம்

நிலவுக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் குழுவினரில் ஒருவரான மைக்கேல் கொலின்ஸ் தனது 90 ஆவது வயதில் காலமானார்.

புற்றுநோயால் அவதிப்பட்ட கொலின்ஸ் கடந்த புதன்கிழமை மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அபலோ விண்கலம், 1969 ஆம் ஆண்டில் நிலவில் மனிதன் முதலில் கால்பதித்த சம்பவத்திற்கு பெயர்பெற்றது. அதன் விமானி, மைக்கல் கொலின்ஸ் சக விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ரோங், பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் கால் பதிக்கச் சென்றபோது, விண்கலத்தில் தனியாக இருந்தார்.

அதற்காகவே, “வரலாற்றில் மிகத் தனிமையான மனிதன்” என்று அப்போது வருணிக்கப்பட்டார்.

நிலவுப் பயணம், பூமி குறித்த தம்முடைய கண்ணோட்டத்தை முழுமையாக மாற்றிவிட்டதாகக் கொலின்ஸ் கூறியிருந்தார். பூமி மிகவும் வலிமையற்றது என்றும், அதைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை தாம் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கொலின்ஸின் மரணத்திற்கு 91 வயதான பஸ் ஆல்ட்ரின் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இத்தாலியில் பிறந்த கொலின்ஸ் விமானப்படை விமானியாக இருந்து பின்னர் ஜெமினி திட்டத்தில் விண்வெளி வீரரானார். விண்வெளியில் மிதந்த மூன்றாவது அமெரிக்கராக அவர் உள்ளார்.

மைக்கேல் கொலின்ஸ், சுமார் 238,000 மைல்கள் பயணித்து நிலவை நெருங்கினார். நிலவில் இருந்து 69 மைல்கள் தொலைவுக்கு வந்தபோதும், நிலவில் கால் வைக்கவில்லை. ஆல்ட்ரின் மற்றும் ஆம்ஸ்ட்ரோங் இருவரும் நிலவின் மேற்பரப்பில் இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ஒரு நாள் சுற்றுப்பாதையில் கழித்தார்.

இந்த தருணத்தில் தான் தனிமையில் இருக்கவில்லை என்றும், ஒரு கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு விமானியாக இருந்ததால், விண்வெளி பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக உணர்ந்ததாகவும் மைக்கேல் கொலின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Fri, 04/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை