ஆயிரம் எப்படி பெறுவது என்பது எமக்குத் தெரியும்

நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை மட்டுமே பொறுமை

 

ஆயிரம் ரூபா சம்பளத்தை எப்படி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும்.

நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம். பயத்தால் அல்ல, நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அமையுமென  நம்புகின்றோம் என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர், 1,000 ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 05 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம் வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்க முடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 05 ஆம் திகதி நல்ல முடிவு வருமென நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர். அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்கின்றோம்.

அதேவேளை, ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சை எவ்வாறு பெறவேண்டும் என்பதும் எமக்கு தெரியும். மாகாணசபைத் தேர்தல் முடிந்ததும் அதனை பார்க்கலாம் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

 

 

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்கள்

Sat, 04/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை