கடற்றொழிலாளர்களை பாதிக்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது

- அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தீரமானங்களையும் நான் மேற்கொள்ளமாட்டேன். என்னுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால், அதில் உண்மை இருந்தால் நான் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன். ஆனால் பொய்க் குற்றச்சாட்டுக்களை ஒரு போதும் பொருட்படுத்தப் போவதில்லை. அவற்றை உதாசீனம் செய்து விடுவேன்" என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிக்கு தான் எப்போதும் தலை வணங்க தயாரெனவும் ஆனால் அநீதிக்கு ஒரு போதும் தலை சாய்க்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.

தேசிய மீனவர் மஹா சம்மேளனத்தின் பணிப்பளார் சபைக் கூட்டம் நேற்று (23) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கஞ்சன விஜேசேக்கர தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

"இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு சாதமாக நான் செயல்படுவதாகவும் ஒரு சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் எனக்கெதிராக ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

புலிகள் இருந்த காலத்திலும் இவ்வாறான போலிப் பிரசாரங்கள் இவ்வாறான சில ஊடகங்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய தரப்பில் முன் வைக்கப்பட்ட சில ஆலோசனைகள் தொடர்பாகவே நான் கருத்து தெரிவித்திருந்தேன். அதற்கு கண், காது மூக்கு வைத்து திரிபுபடுத்தி குறிப்பிட்ட சில ஊடகங்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்திய தரப்பிலும் எமது தரப்பிலும் முன் வைக்கப்பட்ட விடயங்கள் ஆலோசனை மட்டத்திலேயே உள்ளன.

இறுதி தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்பட வில்லை. எமது கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றுமாறு நான் தொடர்ந்து எமது கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றேன்.

இப்பிரச்சினை இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். இதனை இராஜதந்திர முறையிலேயே தீரக்க வேண்டும். நான் ஒரு தமிழ் அமைச்சராக இருந்த போதும் ஜனாதிபதியும் பிரதமரும் என் மீது நம்பிக்கை வைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சினை வழங்கியுள்ளனர்.

ஆகவே அனைத்து இனங்களுக்கும் நான் எவ்வித பாகுபாடும் காட்டாமல் சேவை புரிவேன். என்னை எந்நேரமும் சந்திக்கலாம். குறிப்பாக யாரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு கிடையாது.

இங்கு கடற்றொழிலாளர்கள் முன்வைக்கின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை நான் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

Sat, 04/24/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை