உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது

அதிகாரம் , சமூக அந்தஸ்து, கௌரவம் எதுவும் பார்க்கப்படமாட்டாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எத்தகையை அதிகாரம் மிக்க நபர்களாகவோ அல்லது எத்தகைய அதிகாரங்களை கொண்டிருந்தாலும் அவர்களை அரசாங்கம் பாதுகாக்காதென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான 04ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாவனல்லை சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்க முடியும். இந்தப் பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது. மாவனல்லை சம்பவத்தின் பின்னர் பலர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், துர்திஷ்டவசமாக அவர்கள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்?. இப்போதுள்ள சாட்சியங்களின் பிரகாரம் அத்தருணத்தில் இந்தச் சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு அரசியல் உத்தரவுகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்றும் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.

ஆணைக்குழுவின் அறிக்கையில் நபர்கள், சம்பவங்கள், இடங்கள் தொடர்பில் தெளிவான சாட்சியங்கள் உள்ளன. வானத்தவில்லுவில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தெளிவான சாட்சியங்கள் உள்ளன. இருபத்தாறாயிரம் வாள்கள் இறக்குமதி தொடர்பில் ஆராயுமாறு கர்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்றிருந்தார். இதற்காக தற்போது இரண்டு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 26 ஆயிரம் வாள்களை நாட்டுக்குள் கொண்டுவருவது இலகுவான காரியமல்ல. இதற்காக அரசியல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிய வேண்டும்.

36 முழுமைப்படுத்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பட்டுள்ளன. சட்ட மாஅதிபர் திணைக்களம்தான் வழக்குத் தாக்கல் தொடர்பிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் பக்கத்தில் அனைத்து பணிகளும் இடம்பெற்றுள்ளன. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சாட்சியங்கள் போதுமா என்பதை சட்ட மாஅதிபர்தான் தீர்மானிக்க வேண்டும்.

இதேவேளை, ஓர் அரசாங்கமாக எந்தவொரு நபரை கஷ்டத்திற்கு உட்படுத்த நாம் செயற்படவில்லை. ஆனால், எத்தகைய அதிகாரம் மிக்க நபராகவிருந்தாலும் அல்லது எத்தகைய அதிகாரங்களை அவர் கொண்டிருந்தாலும் அவர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டிருந்தால் அரசாங்கம் அவரை காப்பாற்றாதென பொறுப்புடன் கூறுகிறேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 04/08/2021 - 06:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை