சோமாலியாவில் ஜனாதிபதி தவணை குறித்து படைகளுக்கிடையே மோதல்

சோமாலிய தலைநகர் மொகடிசுவில் பாதுகாப்பு படைகளில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே மோட்டார் குண்டுகள் மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் சில இராணுவ பிரிவுகள் ஜனாதிபதி அப்துல் முஹமதுக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஏனைய தரப்புகள் அவரை எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

பார்மஜோ என்று அழைக்கப்படும் முஹமது கடந்த வாரம், தனது பதவிக்காலத்தை சர்ச்சைக்குரிய முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தார். இதனை ஐ.நா மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகம் கண்டித்திருந்தது.

நாட்டின் மத்திய பகுதி உட்பட ஏனைய பகுதிகளுக்கும் மோதல்கள் பரவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரச ஆதரவுப் படைகள் மற்றும் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் இராணுவப் பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதும் இதில் முன்னாள் போர் தரப்புகள் மற்றும் பழங்குடித் தலைவர்களும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் உயிர்ச் சேதங்கள் பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை.

வீதிகளில் டயர்க்கள் கொளுத்தப்பட்டு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் வடக்கு மொகடிசுவின் பகுதிகளை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றி இருப்பதாகவும் தனியார் செய்தி இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அரச ஆதரவுப் படைகள் தமது வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் சோமாலிய ஜனாதிபதி ஹசன் செய்க் மஹ்மூத் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அப்திரஹ்மான் அப்திசகூர் தெரிவித்துள்ளனர்.

சோமாலியா பல தசாப்த மோதல்களால் பிளவுபட்டிருந்தபோதும் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச ஆதரவு அரசு ஒன்று நிறுவப்பட்டது முதல் ஸ்திரத்தன்மை நீடித்து வருகிறது.

ஜனாதிபதி முஹமதுவின் பதவிக்காலம் கடந்த பெப்ரவரி மாதம் முடிவுற்ற பின் தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது நாட்டில் குழப்ப சூழலை உருவாக்கியது.

சில சர்வதேச நன்கொடையாளர்கள் வெளியேறியதால் சோமாலிய அரசு நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது.

சோமாலிய தேர்தல் முறை சிக்கலானது. அங்கு பழங்குடியைச் சேர்ந்த மூத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதோடு அந்த உறுப்பினர்களே ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

Tue, 04/27/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை