ரிஷாத் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்

நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதலபாதாளத்திற்குச் சென்றிருப்பதையே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் கைது எடுத்துக் காட்டுவதாகவும், அந்த ஜனநாயக விரோத நடவடிக்கை வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புனித ரமழான் மாதத்தில் நடுநிசியில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டுக் கவலையடைகின்றேன்.

இவ்வாறான முறைகேடான அரசியல் உள்நோக்கம் கொண்ட கைதுகள் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்குகின்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்ட பின்னரும், பேராயர் போன்றோரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருக்கத்தக்கதாக, அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களும் மேலோங்கியிருக்கும் போது இதற்கான சூத்திரதாரி யார் என்பதை மூடி மறைத்து, மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம் பெறுகின்றன என்றார்.

Mon, 04/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை