ஹல்துமுல்ல பகுதிக்கு ஜனாதிபதி விஜயம்

- மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு 

கிராமத்துடனான வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதுளை மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான ஹல்துமுல்ல வெலங்விட்ட கிராமத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுபெற்றுக் ​கொடுத்துள்ளார்.  

கிராமத்துடனான வேலைத்திட்டம் முதலாவது செயற்திட்டத்தின் முன்னேற்றத்தை மேற்பார்வைசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ​நேற்றைய தினம் ஹல்துமுல்ல வெலங்விட்ட கிராமத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதுவரை காலமும் கவனிக்கப்படாத நிலையிலிருந்த மேற்படி கிராமத்தின் மக்களை நேரடியாக சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.  

அதனையடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் உடனடியாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுவந்தார்.    கடந்த செப்டெம்பர் 25ம் திகதி கிராமத்துடனான வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் முதற்கட்ட செயற்திட்டம் இக்கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது. மக்களினால் தெரிவிக்கப்பட்ட மற்றும் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைப்பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதன்போது பணிப்புரை விடுத்திருந்தார்.    அதன்பின்னர் ஏழு மாதங்களுக்குப் பின்னர் அதன் முன்னேற்றங்களைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி நேற்று அங்கு சென்றிருந்தார். அதன்போது, மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த கொடபோகஸ்தென்ன விளையாட்டு மைதானத்தை ஜனாதிபதி பார்வையிட்டார். இக் கிராமத்தின் யானை பாதுகாப்பு வேலிகள் இரண்டு வருடங்களாக சிதைவடைந்திருந்த நிலையில் 6 கிலோமீற்றருக்கான வேலி இதன்போது மறுசீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.    யானை வேலியை பாதுகாக்கும் பொறுப்பு கிராம மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் ஒரு கிலோமீற்றருக்கு ஒருவர் என்ற நிலையில் அவற்றைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு மாதாந்தம் 7500 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன தெனிபிட்டிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 04/27/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை