கொள்ளுப்பிட்டி பொதுச்சந்தை காணி நகர அபிவிருத்தி அதிகார சபை வசம்

- விரைவில் 39 மாடியிலான புதிய குடியிருப்பு தொகுதியுடன் சந்தை  

கொள்ளுப்பிட்டி பொதுச் சந்தை அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி தொடர்பான உத்தேசத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் கடந்த மார்ச் 12ஆம் திகதியன்று அலரி மாளிகையில் வெளியிடப்பட்டது.  

தற்போது கொள்ளுப்பிட்டி சந்தை அமைந்துள்ள இடத்தில் 39மாடியிலான புதிய சந்தையுடன் கூடிய குடியிருப்பு கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகள் முழுமையாக சந்தை தொகுதிக்காக ஒதுக்கப்படும்.  

எட்டாவது மாடியிலிருந்து மேல்நோக்கி இரண்டு கோபுரங்களில் கட்டப்படும் 30மாடிகள் சொகுசு குடியிருப்பு கட்டிடங்களை கொண்டதாக  அது அமையும்.  

புதிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம்  மாம்பழங்கள், பழங்கள் அல்லது காய்கறிகளை விற்க விரும்பும்

எவருக்கும் இடம் உண்டா? என்று பிரதமர் வினவினார்.  

பழங்கள் மற்றும் காய்கறிகளின் விற்பனைக்கு இங்கு ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்தென கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.  

அதற்கமைய, சாதாரண வர்த்தகர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு புதிய சந்தை வளாகத்தில் நிச்சயமாக இடம் ஒதுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார். இப்புதிய சந்தை வளாகத்தை சுற்றுலாத் தளமாகவும், உள்ளூர் உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.    தற்போது 30-, 40வாகனங்கள் மாத்திரமே இங்கு நிறுத்தக்கூடியதாக உள்ள போதிலும், இந்த உத்தேச திட்டத்தின் ஊடாக 348வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையிலான வாகன தரிப்பிடமொன்று நிர்மாணிக்கப்படும்.  

கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி திட்டம் குறித்து ‘டிசைன் ஒன்’ முகாமைத்துவ பணிப்பாளர் சிரேஷ்ட கட்டிடக் கலைஞர் தனஞ்சன அமரசேகர விளக்கினார். கொழும்பு மாநகர சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து, உத்தேச திட்டம் ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.  மூன்றாண்டுகளில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படும் புதிய திட்டத்திற்கு இம் மாதத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.    நகர அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை, மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகியன இணைந்ததாக இப்புதிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/28/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை