உலக அளவில் ஒரு பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

பாதிக்கும் அதிகமானவை 3 நாடுகளில் பயன்பாடு

உலகெங்கும் கொரோனா தொற்றுக்கு எதிராக ஒரு பில்லியன் தடுப்பு மருந்துகள் போடப்பட்டிருப்பதோடு அதில் பாதிக்கும் அதிகமானவை வெறும் மூன்று நாடுகளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை வரை உலகில் 207 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1,002,938,540 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து ஐந்து மாதங்களுக்கு குறைவான காலத்திலேயே இந்த இலக்கு எட்டப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

உலகில் தினசரி கொரோனா தொற்று சம்பவங்கள் 893,000 ஐ தாண்டியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் வைரஸ் பரவல் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

எனினும் தடுப்பூசி வழங்கப்பட்டதில் 58 வீதமானது வெறும் மூன்று நாடுகளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது அமெரிக்காவில் 225.6 மில்லியன் டோஸ்களும், சீனாவில் 216.1 மில்லியன் டோஸ்களும், இந்தியாவில் 138.4 மில்லியன் டோஸ்களுமாகும்.

எனினும் மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது இஸ்ரேல் உலகில் முன்னிலையில் உள்ளது. 10 இஸ்ரேலியர்களில் ஆறு பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் மக்கள் தொகையில் 51 வீதத்தினருக்கும், பிரிட்டனில் 49 வீதத்தினருக்கும், அமெரிக்காவில் 42 வீதத்தினருக்கும், சிலியில் 41 வீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொவக்ஸ் திட்டத்தின் கீழ் பெரும்பாலான வறிய நாடுகளிலும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் குறைந்த வருமானம் உடைய நாடுகளில் 0.2 வீத தடுப்பூசிகளே இதுவரை வழங்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சுமார் 12 நாடுகளில் இன்னும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 04/26/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை