BATTI CAMPUS தனியார் பல்கலைக்கழகம்; அரச பல்கலையாகவோ, பாதுகாப்பு பல்கலை மண்டபமாகவோ மாறும்

- அரசாங்கம் தீவிர ஆலோ​சனை 

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரச பல்கலைக்கழகமாக அல்லது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஒரு மண்டபமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்துவதுடன் மிக விரைவில் இரண்டில் ஒரு தீர்மானத்தை அறிவிப்போமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்ன எழுப்பியிருந்த கேள்வியொன்றுக்கு அமைச்சின் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் எனப்படும் நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் அல்ல. பட்டங்களை வழங்க இந்நிறுவனத்திற்கு எவ்வித சட்ட ரீதியான அனுமதியும் அளிக்கப்படவில்லை, அதற்கு அதிகாரமும் இல்லை. ஆனால் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளும் கட்டடங்களும் அங்கு உள்ளன. இங்குள்ள சில உட்கட்டமைப்பு வசதிகள் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் கூட இல்லை. ஆகவே, இங்குள்ள கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதென தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளது.  

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை பாரிய அளவில் அதிகரித்துள்ளோம். கடந்த வருடம் 30ஆயிரம் மாணவர்கள்தான் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வருடம் 41ஆயிரத்து 500பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாட்டில் மொத்தமாக 16பல்கலைக்கழகங்கள் தற்போதுள்ளன. அடுத்தமாதம் 17ஆவது அரச பல்கலைக்கழகத்தையும் திறப்பதற்கு எதிர்பார்க்கிறோம். அதன் பிரகாரம் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள சலுகைகளை பயன்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.  

மட்டக்களப்பு பல்கலைக்கழகமெனப்படும் தனியார் நிறுவனம் தொடர்பில் இரண்டு மாற்று யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் வளங்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு பயன்படுத்த எதிர்பார்க்கிறோம். கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு சூரியவெவ பகுதியில் ஒரு மண்டபமொன்று உள்ளது. அது சிறப்பாக இயங்கும் நிலையில் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் மற்றுமொறு மண்டபத்தை மட்டக்களப்பில் திறப்பதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்காக மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை பயன்படுத்த முடியும். இதனால் கிழக்கில் உள்ளவர்கள் நன்மையடைய முடியும்.  

இரண்டாவது யோசனையானது அரசின் மற்றுமொரு பல்கலைக்கழகமாக மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை பயன்படுத்துவது. இந்த இரண்டு திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. விரைவில் இதுகுறித்து தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றார். 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Fri, 04/23/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை