பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு; ஒரே குடும்பத்தின் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நன்கர்ஹார் மாகாணத்தில் அடையாளம் தெரியாத தாக்குதல்தாரிகள் பள்ளிவாசல் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜலாலாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. காணிப் பிரச்சினை ஒன்று காரணமாகவே இந்த கொலைகள் இடம்பெற்றிருப்பதாக நன்கர்ஹார் ஆளுநர் சியாவுல்ஹக் அமர்கைல் தெரிவித்துள்ளார்.

ஐந்து சகோதரர்கள் மற்றும் மேலும் மூன்று ஆண் உறவினர்களே கொல்லப்பட்டுள்ளனர். புனித ரமழான் மாத இரவு நேரத் தொழுகையின்போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் காணி பிரச்சினைகள் வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் பரம்பரை பரம்பரையாக வன்முறைகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

இதே மாகாணத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காணிப் பிரச்சினை ஒன் றில் குறைந்தது ஆறு பழங்குடி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதோடு 20 பேர் காயமடைந்தனர்.

நன்கர்ஹார் தலிபான்கள் பலம் பெற்ற பகுதி என்பதோடு, அது நாட்டின் முக்கிய விவசாய நிலமாகவும் உள்ளது.

Tue, 04/20/2021 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை