யெமன் மாரிப் நகரில் மும்முனை மோதல்; இரு தரப்பிலும் 70 பேர் பலி

யெமனின் மூலோபாயம் மிக்க மாரிப் நகரில் மூன்று முனைகளில் வெடித்திருக்கும் கடும் மோதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் அரச ஆதரவுப் படை மற்றும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களில் 70 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ ஆதரவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் வடக்கில் அரசின் வசம் இருக்கும் முக்கிய பகுதியும் எண்ணெய் வளம் கொண்ட பிராந்தியத்தின் தலைநகருமான மாரிப்பை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்ற முயல்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்து முன்னேற முயன்று வரும் நிலையில் 26 அரச ஆதரவுப் படையினர் மற்றும் 44 ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இரு அரச தரப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் தமது தரப்பு இழப்புகள் பற்றி மிக அரிதாகவே வெளிப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 53 பேர் கொல்லப்பட்டதையும் இராணுவ ஆதரவு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஈரான் ஆதரவு ஹூத்திக்கள் 2014 பிற்பகுதியில் தலைநகரை கைப்பற்றியதை அடுத்தே யெமன் உள்நாட்டுப் போர் வெடித்தது.

இதனால் சவூதி அரேபிய ஆதரவு கொண்ட யெமன் அரசு தெற்கு நகரான அதேனை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் மாரிப் நகரை அரச படை இழந்தால் அதற்கு பெரும் பின்னடைவாக அமையும்.

குறிப்பாக யெமன் போரினால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் மாரிப் நகரில் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் இங்கு இடம்பெறும் மோதல் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tue, 04/13/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை