மட்டக்களப்பு பறங்கியாமடுவில் 43 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

- மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதி

சிறு சிறு உதவிகளைச் செய்துவிட்டு  விளம்பரம் தேடும் இவ்வுலகில் பாரிய உதவியை செய்துள்ள "புதுவாழ்வும் புனர்வாழ்வும்" அமைப்பினரைப் பாராட்டுகிறேன், என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

கிரான் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பறங்கியாமடுவில் 43வீடுகளைத் திறந்துவைத்து மேலும் குறிப்பிடுகையில்,

புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பினர் மலேசியா தமிழர்பேரவை மற்றும் சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையோடு பறங்கியாமடுவில் மணல் குடிசைகளில் அடிப்படைவசதிகளற்று வாழ்ந்துவந்த 43குடும்பங்களுக்கு வீடுகளையும், மலசல கூட மின்னிணைப்பு வாழ்வாதார வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த வீடுகளின் திறப்பு விழா புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் இலங்கைக்கான தலைவர்  ஹென்றி அமல்ராஜ் தலைமையில் திங்கட்கிழமை  (19) நடைபெற்றது.​

விழாவில் புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் சர்வதேசத் தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், கிரான் பிரதேச செயலாளர் ரி.ராஜ்பாபு, உதவிக் கல்விப் பணிப்பாளர், வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அரசாங்க அதிபர்  மேலும் உரையாற்றுகையில்...

அடிப்படை வசதிகளற்று இன்றும் பல பிரதேசங்கள் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றன. அதனை இனங்கண்டு இவ்வமைப்பினர் இன்று எவ்வித விளம்பரமுமில்லாமல் செய்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைச்சேவைக்காக மாவட்டத் தலைவர் என்ற வகையில் மனதாரப் பாராட்டுகிறேன்.

இதற்கு கைமாறாக இக்கிராம மக்கள் செய்யவேண்டியது என்ன? நீங்கள் முதலில் உங்கள் காணியைச்சுற்றி வேலி அமைத்து வாழை நடுங்கள், பூக்கன்றுகள் நடுங்கள், அப்போது உங்கள் கிராமம் புன்னகையால் சிரிக்கும். உங்கள் வாழ்க்கைப்பாங்கு அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து செல்லும் என்பதில் ஐயமில்லை. விழாவில் பயனாளிகளின் வீடுகள் நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டன.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்)

Wed, 04/21/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை