4,000 சூப்பர் மார்க்கட்களில் சலுகை; இன்று முதல் அரிசி விலை வெகுவாக குறைப்பு

அரிசியை இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் குறைந்த விலையில் பொது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார். “2,500  உள்ளூர் கூட்டுறவு நிறுவனங்கள், 454 சதொச நிறுவனங்கள் உட்பட 4,000இற்கும் அதிகமான சுப்பர் மார்க்கெட்டுகளில் புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இன்று முதலாம் திகதிமுதல் இந்த விலை அமுலாகும்.

அதன் பிரகாரம் நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ ரூ.93க்கும் விற்கப்படும். இதற்காக அனைத்து சுப்பர் மார்க்கெட்களிலும் அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அரிசி மாஃபியாவைத் தடுக்கும் பணியை ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்திருந்தார். அதனை நான் செய்து முடித்துள்ளேன். அரிசி மாஃபியாவை தடுக்காதிருந்தால் புத்தாண்டுக் காலப்பகுதியில் 115 ரூபாவுக்குதான் ஒரு கிலோ அரிசியை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

விவசாயிகளையும் நுகர்வோரையும் சுரண்டிய மூன்றாம் தரப்பு மாஃபியாவை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். அடுத்ததாக சோளம் மாஃபியாவையும் தடுப்போம்.

இதேவேளை, பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தை விமர்சிப்பதில் எந்த அர்த்தமுமில்லை. இரண்டு தொழிலதிபர்களே தேங்காய் எண்ணெய்யை இவ்வாறு நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளனர். அந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் சந்தைக்கு அனுப்பப்பட்டிருந்தால் உரியவாறு சட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும். ஐந்து ஆண்டுகளாக இவ்வாறான மோசடிகள் மறைக்கப்பட்டிருந்தன.

மோசடிகளைப் கண்டறிவதன் மூலமும் தண்டிப்பதன் மூலமும் இந்த நாட்டில் மக்கள் விரும்பியதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பூர்த்தி செய்கிறார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 04/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை