சஹேல் பிராந்தியம்: 29 மில்லியன் மக்களுக்கு ஐ.நா உதவி கோரிக்கை

ஆபிரிக்காவின் பதற்றம் கொண்ட சஹேல் பிராந்தியத்தில் ஆறு நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினை மற்றும் பட்டினி காரணமாக 29 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

புர்கினா பாசோ, வடக்கு கெமரூன், சாட், மாலி, நைகர் மற்றும் வட கிழக்கு நைஜீரியா நாடுகளில் கடந்த ஆண்டை விடவும் மேலும் ஐந்து மில்லியன் பேருக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் தொடக்கம் செங்கடல் வரை சஹாராவின் தெற்கு விளிம்புப் பகுதியை இணைக்கும் பகுதி வறண்ட சஹேல் பிராந்தியத்தில் கடந்த ஆண்டுகளில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இங்கு ஆயுதக் குழுக்கள், இராணுவ ஆதரவு போராட்டக் குழுக்கள் மற்றும் சர்வதேச கூட்டுப்படைகள் இந்தப் பிராந்தியத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

“மேலும் சிக்கல் கொண்டதாகவும் மேலும் ஆயுதக் குழுக்களின் பங்கேற்புடனும் சஹேலில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன” என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் இணைப்பாளர் சாவிர் கிரீச் தெரிவித்துள்ளார்.

Thu, 04/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை