கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக உள்ள திருநெல்வேலி பாரதிபுரம் இன்று விடுவிக்கப்படும்

- மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து விழிப்பாக செயற்பட வேண்டுகோள் 

கடந்த 28நாட்களாக கண்காணிப்பு வலயமாக உள்ள யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாரதிபுரம் பகுதி இன்று முதல் விடுவிக்கப்படும். யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனால் மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடித்து விழிப்பாக செயற்பட வேண்டும் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.  

யாழ். மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  தொற்று குறைவடைந்துள்ளது.  

யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை கடந்த வாரம் சற்று அதிகரித்த நிலைமை காணப்பட்ட போதிலும், இந்த வாரம் கொரோனா தொற்று நிலைமை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது. 

யாழ். மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் 1155பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 639நபர்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 17இறப்புக்கள் பதிவாகியுள்ளன. 

அதேவேளை தற்போது யாழில் 1547குடும்பங்களைச் சேர்ந்த 4417பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். பி.சி.ஆர் பரிசோதனைகள் மக்கள் கூடும் இடங்களிலும், வர்த்தக நிலையங்களை அண்டிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது எழுமாறாக இடம்பெற்று வருகின்ற ஒரு செயற்பாடாக இருக்கின்றது. 

திருநெல்வேலியில் முடக்கப்பட்ட பகுதி விடுவிப்பு 

கடந்த வாரமளவில் திருநெல்வேலியில் முடக்கப்பட்ட ஒரு பகுதியினை தவிர்ந்த ஏனைய பகுதியினை விடுவித்திருந்தோம். அந்நிலையில் முடக்கப்பட்டிருந்த பாரதி புரம் எனும் பகுதி இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர்கள் எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 

அங்கு நேற்று 97பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளில் மூன்று நபர்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பபட்டுள்ளது. ஏனையோருக்கு தொற்றில்லை. அந்த நிலைமை திருப்தியாக உள்ளது. அதன் காரணமாக இன்று திருநெல்வேலி பாரதிபுரம் பகுதி கண்காணிப்பு வலயத்தில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.  

அதேவேளை யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும், உதவித்தொகை, உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றோம். இதுவரையில் 4823குடும்பங்களுக்கு, 50.49மில்லியன் ரூபா அதற்கென செலவிடப்பட்டுள்ளது.  

மேலும் யாழ் மாவட்டத்தில் தனியார் மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டபடி ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது. அதற்குரிய சுகாதார வழிகாட்டல்களையும், சுகாதார மற்றும் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, கல்விச் செயற்பாடுகள் வழமை போல் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. 

தொற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம்.  

இதேவேளை எதிர்வரும் நாட்களில், தொற்று நிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக, பொது மக்கள் சற்று விழிப்பாக செயற்பட வேண்டும். குறிப்பாக நகரப்பகுதி மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள், பொது மக்கள் அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அநாவசிய நடமாட்டங்களை தவிர்த்து, தேவையானவற்றுக்கு மாத்திரம் வருகை தரலாம். அவ்வாறு வரும் போது, முககவசம் அணிதல், சமூகவிடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.     

யாழ்.விசேட நிருபர் 

Fri, 04/23/2021 - 11:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை