24 மணித். 121 விபத்துகள்; போதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது

24 மணித். 121 விபத்துகள்; போதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது-758 Drunk Drivers Arrested in Last 24 Hour-10 Deaths Reported

- விபத்துகள் தொடர்பில் 14 பேர் மரணம்
- இன்றும் இந்நிலை மோசமடையலாம்
- ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்

கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் மது போதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துகள் தொடர்பில் 14 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதில் 10 பேர், நேற்றையதினம் (14) மாத்திரம் இடம்பெற்ற விபத்துகளில் மரணமடைந்தவர்கள் எனவும், ஏனைய நால்வரும் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 121 வீதி விபத்துகள் நேற்றையதினம் (14) இடம்பெற்றுள்ளதோடு, அதில் 12  விபத்துகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்றுள்ளதோடு, இதில் ஒருவருக்கு காயமேற்பட்டதாக தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய வீதிகளில் 109 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், மொத்தமாக 74 பேர் இவ்விபத்துகளில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்விபத்துகளில் அதிகளவானவை மோட்டார் சைக்கிள் விபத்துகள் என சுட்டிக்காட்டிய அவர், 53 மோட்டார் சைக்கிள்கள், 30 முச்சக்கர வண்டிகள் இவ்விபத்துகளில் சிக்கியுள்ளதாக பதிவாகியுள்ளதோடு, ஏனையவை கார், வேன், உள்ளிட்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களும் விபத்துகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு பதிவான விபத்துகள் மற்றும் காயமடைந்த சம்பவங்கள், பொலிஸ் நிலையங்களில் பதிவானவை மாத்திரம் எனவும், அவ்வாறு தகவல் கிடைக்கப் பெறாத விபத்துகளும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விபத்துகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

எனவே, பயணங்கள், சுற்றுலாக்கள், போன்றவற்றிற்காக செல்லும் நீங்கள், மிக அவதானமாக இருப்பதோடு, போக்குவரத்து விதிகளைப் பேணுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் சோகத்தில் முடிவடைவதிலிருந்து உங்களை நீங்களே காத்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒரு போதும் போதையில் வாகனங்களை செலுத்த வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ள அவர், கடந்த 24 மணித்தியாலங்களில் போதையில் வாகனம் செலுத்திய 758 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு போதையில் வாகனம் செலுத்துவோருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது எனத் தெரிவித்த அஜித் ரோஹண, இவ்வாறு செலுத்தப்படும் வாகனங்கள் உடனடியாக விடுவிக்கப்படாது எனவும் சுட்டிக்காட்டினார்.

போதையில் வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என்பதோடு, அவர்களுக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டால் அதன் பின்னரான நாளொன்றில் அவர்களது வாகனங்கள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நிலையில், ரூபா 25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், அவரது அனுமதிப்பத்திரம் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்படலாம் அல்லது செல்லுபடியற்றதாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஏப்ரல் 14, 15 தினங்கள் அதிகளவான விபத்துகள் பதிவாகும் நாட்களாக, புள்ளி விபரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதால், இன்றையதினம் (15) இந்நிலை மேலும் மோசமடையும் வாய்ப்பு காணப்படுவதால், அனைவரும் உரிய வீதிப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

Thu, 04/15/2021 - 07:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை