கொரோனா வைத்தியசாலை தீயில் ஈராக்கில் 23 பேர் பலி

ஈராக் தலைநகர் பக்தாதில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இபின் காதிப் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தீயில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஒட்சிசன் தொட்டியில் ஏற்பட்ட வெடிப்பே இந்த தீ ஏற்படுவதற்கு காரணம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் அந்த மருத்துவமனை கட்டடத்தில் இருந்து வெளியே செல்வதும், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடுவதும் சமூக ஊடகத்தில் வெளியாகி இருக்கும் வீடியோக்களில் தெரிகிறது.

இதனை கவலைக்குரிய விபத்து என்று வர்ணித்திருக்கும் ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, இதற்கான காரணம் பற்றி உடன் விசாரணை நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிலேயே தீ ஏற்பட்டதாக ஈராக் சிவில் பாதுகாப்பு தலைவர் மேஜர் ஜெனரல் காதிம் பொஹான் தெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலையாகும்போது தீ கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஈராக்கில் கடந்த பெப்ரவரி தொடக்கம் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதோடு அங்கு தொற்றுச் சம்பவங்கள் தற்போது ஒரு மில்லியனைத் தொட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் ஈராக்கில் 15,217 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் கடந்த மாதம் அரம்பிக்கப்பட்ட நிலையில் சுமார் 650,000 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Mon, 04/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை