22 மாவட்டங்களில் கொரோனா தொற்று; எதிர்வரும் 2 வாரங்கள் எச்சரிக்கை மிகுந்தவை

- சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்

நாட்டின் 22 மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காணப்படுவதாகவும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் 895 புதிய வைரஸ் தொற்று நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 218 பேர் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தல தலங்கம, கோட்டே,கொட்டாவ மற்றும் மொரட்டுவை பகுதிகளிலேயே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவிக்கையில்;

நாட்டில் மீண்டும் தினமும் 800 -900ற்கும் அதிகமான வைரஸ் தொற்று நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம். மக்கள் வீண் பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே தங்கி இருப்பது முக்கியமாகும். சிலர் இந்த காலகட்டங்களில் தமது வீடுகளில் நண்பர்களுடன் விருந்துபசாரங்களை நடத்துகின்றனர். மற்றும் ஏதாவது வகையில் மக்கள் கூட்டமாக இணையும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அத்தகையோர் இந்த காலகட்டம் மிக எச்சரிக்கையான காலகட்டம் என்பதை உணர்ந்து செயற்படுவது முக்கியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, எதிர்வரும் வெசாக் பண்டிகை காலங்களில் சமய அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளித்து எத்தகைய நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/26/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை