பதுளை மாவட்டத்தில் 20,620 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லாத அவலம்

பதுளை மாவட்டத்தில் 20,620 குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்திருப்பதாக பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.

பதுளை மாவட்ட அரச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமது ஆய்வில்  போது பதுளை மாவட்டத்தில்​ 20,620  குடும்பங்களுக்கு வீடுகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இவர்களில் 10,748குடும்பங்களுக்கு ஓரளவில் சாதாரண வீடொன்றினை அமைத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கான காணிவசதி இல்லாத நிலையும் இருந்து வருகின்றது. மேலும்136குடும்பங்கள் ஓலைக்குடில்களில் வசித்து வருகின்றனர்.

பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்களை ஏழு கம்பனிகள் நிர்வகித்து வருகின்றது. கம்பனிகள் பொறுப்பில் 63பெருந்தோட்டங்கள் உள்ளன. பெருந்தோட்டங்களில் 37,655குடியிருப்புக்கள் இருந்து வருகின்றன. தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் வீடுகளற்ற நிலை காணப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தில் 2,68,579குடும்பத்தினர் மொத்தமாக தத்தமது வாழ்வியலை மேற்கொண்டுவந்த போதிலும் 2,43,541குடும்பத்தினருக்கே வீடுகள் இருக்கின்றன.   

இத்தொகையானது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு இருபது வீதமாகும்.

இவர்கள் ஆறு, நீர் ஓடை, நீர்த்தடாகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் நீரையே குடிநீருக்காகவும் பயன்படுத்திவருகின்றனர். தேசிய நீர் வழங்கல் சபை ஊடாக நூற்றுக்கு 30வீதமான குடும்பத்தினரும், பிரஜா நீர்த்திட்டங்கள் ஊடாக நூற்றுக்கு 27வீதமான குடும்பத்தினரும், குழாய்க்கிணறுகள் ஊடாக நூற்றுக்கு 23வீதமான குடும்பத்தினரும் நீரைப்பயன்படுத்துகின்றனர்.  இந்நிலையில், எமது மாவட்டத்தில் 263குடிநீர்வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 20வீதமானவர்களான 58,852குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லாதுள்ளன. இதனால், சிறுநீரகநோயாளர்களின் எண்ணிக்கையிலும் இம்மாவட்டத்தில் அதிகரிப்பு காணப்படுகின்றது.

இத்தகைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பாரிய பொறுப்புக்கள் எம்மைச்சார்ந்ததாகவுள்ளது.  அதற்கான முன்னெடுப்புக்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

பதுளை தினகரன் விசேட நிருபர்

Thu, 04/22/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை