“கிராமத்துடன் கலந்துரையாடல்” 17ஆவது நிகழ்வு இன்று வடக்கில்

வட மாகாணத்தின் “கிராமத்துடன் கலந்துரையாடல்” முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நடைபெறும்.

போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகம் இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது “கிராமத்துடன் கலந்துரையாடல்” 17ஆவது நிகழ்வாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் இன்று (03) முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்நிகழ்வில் மாவட்டத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வர்.

வவுனியா நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தூரத்தில் கிழக்கு மற்றும் தெற்கில் அனுராதபுர மாவட்டத்தின் பதவிய, கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகப் பிரிவிற்கும் மேற்கில் நந்திமித்திர கிராமத்தையும் எல்லையாகக் கொண்டு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவு அமைந்துள்ளது.

வெடிவைத்தகல்லு மற்றும் அதனை சூழவுள்ள கிராம மக்கள் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் இதில் பிரதானமானவையாகும். 2010 ஆம் ஆண்டின் பின்னர் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள், வீடுகள், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படாமை, குடிநீர், பயிர்ச் செய்கைக்கான நீர் பற்றாக்குறை, விவசாய பிரச்சினைகளுடன் யானைகளின் அச்சுறுத்தலுக்கும் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வருகின்றனர். காணி உறுதி தொடர்பான பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்வது, குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைத்தல், போகஸ்வெவ வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல், உர களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணித்தல் போன்றவை கிராம மக்களின் ஏனைய வேண்டுகோள்களாகும்.

கிராமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒருதரப்பு நியாயங்களை மட்டும் கவனத்தில் கொண்டு புரிந்துகொள்வது, தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை தாமதப்படுத்தும் என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும். அதிகாரிகள் ஒரு முறையிலும் கிராமத்தினர் வேறு ஒரு முறையிலும் பிரச்சினையை காண்கின்றனர். பிரச்சினையின் எல்லா பக்கத்தையும் சரியாக இனங்கண்டு கொள்வதன் மூலம் தீர்வை பெற்றுக்கொடுப்பது இலகுவானதாகவும் உடனடியாக அத்தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Sat, 04/03/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை