ராஜிதவுக்கு எதிரான விசாரணை ஜூன் 16இல்

கொழும்பு, முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியாருக்கு குத்தகை கொடுத்ததன் மூலம் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண உள்ளிட்ட பிரதிவாதிகள் 03 பேருக்கு எதிராக தொடரப்பட்ட இலஞ்ச,ஊழல் வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படுமென கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் மொஹமட் இர்ஷாதீன் நேற்று ( 22) உத்தரவிட்டார்.

இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவினூடாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, வழக்குக்கு தேவையான ஆவணங்களை பெற்று வழக்கு விசாரணைக்கு தயாராக வேண்டுமென்பதால் வேறு தினமொன்றை வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இதன்படி இந்த வழக்கு ஜூன் மாதம் 16 ஆம் திகதிக்கு எடுக்கப்படுமென குறிப்பிட்ட நீதியரசர், அன்றையதினம் வழக்கை விசாரிப்பதற்கான திகதி அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்தார். இந்த வழக்கின் பிரதிவாதிகளாக மீன்பிடித் துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ரவீந்திர முனசிங்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மற்றும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கிடையேயான காலப்பகுதிக்குள் கொழும்பு, முத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை சீ கல்ப் யூ.கே.பிரைவேட் லிமிடட் என்ற தனியார் நிறுவனத்துக்கு குறைந்த தொகையொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்காக மீன்பிடி துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு அழுத்தம் கொடுத்ததனூடாக இந்த நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக 05 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சியாளர்களாக 17 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வழக்குக்கான சான்றுகளாக 55 ஆவணங்கள் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

Fri, 04/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை