அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15.பில். அமெ. டொலர் முதலீடு

நாடு விரைவில் கடன் சுமையிலிருந்து விடுபடும்

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய முதலீடுகளாக இலங்கைக்கு வரும். இதனால் நாடு கடன்பொறியிலிருந்து மீளும். புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், நாட்டின் பொருளாதாரமும் ஸ்திரமடையும். அதனை தடுக்கும் குறுகிய அரசியல் நோக்கங்களுடன் எதிர்க்கட்சியினர் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டம் கீழான 5 ஒழுங்கு விதிகள் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அந்நிய செலாவணி தொடர்பில் நாடு பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதென்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ தெரிவிக்க வேண்டியுள்ளது. நாடு சுதந்திரமடைந்தது முதல் அரசாங்கங்கள் கையாண்டுள்ள நிதிக் கொள்கைகள் காரணமாக அந்நிய செலாவணி தொடர்பில் நாடு இவ்வாறு பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

நவீன பொருளாதார முறைமையின் கீழ் எம்மைபோன்ற நாடுகள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றன. அதில் முதல் பிரச்சினை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு இடையில் பாரிய பற்றாக்குறை காணப்படுகிறது. நீண்டகாலம் சென்றாலும் எமது நாட்டில் சேமிப்பானது மந்தகதியிலேயே அதிகரிக்கரிக்கிறது. அதனை குறிப்பிட்டளவு வேகத்தில் முதலீடுகள் அதிகரிக்கின்றன. அதனால் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு இடையிலான பற்றாக்குறையை தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

சேமிப்பைவிட அதிகமான முதலீடுகள் இடம்பெற்றால், வெளிநாட்டு கடன்கள், வெளிநாட்டு மானியங்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சேமிப்பு நிதியில் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. சேமிக்கப்படும் நிதியில்தான் நுரைத்சோலை அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டுமென்றால் அது சாத்தியமற்றது. எமது நாட்டில் சேமிக்கப்படும் நிதியில்தான் குடிநீர்த்திட்டங்கள், பாதை அபிவிருத்தி உட்பட ஏனைய அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமென்றால் அவற்றை செய்ய முடியாது.

ஆகவே, மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க கடன், மானியம் மற்றும் முதலீடுகளை பெற்றுக்கொள்கின்றன.

இரண்டாவது பிரச்சினை ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு இடையிலான வேறுபாடுகளாகும். 1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்தை பொருளாதாரத்தின் அறிமுகத்துடன், ஏற்றுமதி அதிகரிப்பு வேகத்திற்கு பதிலாக இறக்குமதி அதிகரிப்பு வேகம் பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அதன் பிரகாரம் சந்தை பற்றாக்குறையும் கொடுக்கல் வாங்கல் நெருக்கடிகளும் ஏற்பட்டன. ரூபாயின் பெறுமதியும் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. நாட்டுக்குள் வரும் டொலர்களைவிட அதற்கு பெறுமதியான ரூபாய்கள் அதிகமாக வெளியில் சென்றால் ரூபா வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. இதனால் அந்நிய செலாவணி மற்றும் அந்நிய கையிருப்புகளுக்கு இடையிலான பிரச்சினைகளும் இருந்தன.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ , நாட்டின் ஜனாதிபதியாகும் போது 103 ரூபாவாக டொலரின் பெறுமதி இருந்தது. அக்காலகட்டத்தில் அதிகமாக அந்நிய செலாவணி அவசியமானது. யுத்தச் சூழல், உலக பொருளாதார நெருக்கடி, உலக நிதி நெருக்கடி, மசகு எண்ணெயின் விலை பாரிய அளவில் உலக சந்தையில் அதிகரித்திருந்தமையென பல்வேறு பிரச்சினைகளுக்கு மஹிந்த அரசாங்கம் முகங்கொடுத்தும் 2015ஆம் ஆண்டு நாட்டை கையளிக்கும் போது டொலருக்கான பெறுமதி 131 ரூபாவாகவே இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் 10 ஆண்டு ஆட்சியில் டொலருக்கான பெறுமதி 26 ரூபாவால்தான் அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டின் பின்னர் அந்நிய செலாவணி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. மசகு எண்ணெயின் விலையும் 2015ஆம் ஆண்டில் குறைவடைந்திருந்தது. குறிப்பாக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மசகு எண்ணெ விலை குறைவாக் சேமிப்பு ஏற்பட்டது. என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் 5 வருடங்களில் டொலரின் பெறுமதியானது 182 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரித்தது. செலுத்தல் கடன்களுக்கு கடன்களை பெறும் சூழல் அதிகமானது.

2029ஆம் ஆண்டுவரை நாட்டை பாரிய நிதி நெருக்கடியிக்குள் சிக்கவிட்டுள்ளனர். இதற்கு தீர்வைகாண தொடர்ந்து எம்மால் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்ள முடியாது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மாத்திரமே ஒரே தீர்வாகும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக எமது நாட்டில் உள்ள பாரிய வேலைத்திட்டமாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மாத்திரமே உள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இதற்கு எதிராக பாரிய பிரசாரங்களை மேற்கொண்டு இத்திட்டத்தை நிறுத்தினர். ஆனால், மீண்டும் ஒன்றரை வருடங்களில் நாம் வழங்கிய நிலப்பரப்புக்கும் அதிகமான நிலப்பரப்பை வழங்கி முத்தரப்பு உடன்படிக்கையையும் கடந்த அரசாங்கம் செய்துக்கொண்டது. அதனை சட்டமயமாக்கும் பணியையே நாம் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக செய்துள்ளோம். சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியாக அமையப்போவது கொழும்பு துறைமுக நகரம்தான்.

2005ஆம் ஆண்டுக்கு முன்னர் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான வெளிநாட்டு முதலீடுகளே நாட்டை நோக்கி வந்திருந்தன. ஆனால், எதிர்வரும் ஐந்து வருடங்களில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு முதலீட்டாக இத்திட்டத்தின் ஊடாக நாம் எதிர்பார்க்கிறோம். இதனைதான் சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கையில் 477 மில்லியன் டொலர்களுக்காக முழு நாட்டையும் காட்டிக்கொடுக்க முற்பட்டவர்கள், துறைமுக நகருக்கு கிடைக்கபோகும் முதலீட்டின் மூலம் உருவாகும் புதிய தொழில்வாய்ப்புகள், வருமான வழிமூலங்கள் உருவாகுதல் என்பவற்றை தடுக்கின்றனர்.

குறைந்த வருமானம் பெரும் நாடாக இருந்த இலங்கையை மத்திய வருமானம் பெரும் நாடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாற்றியிருந்தார். ஆனால், நாடு இன்று பாரிய கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. இதிலிருந்து மீண்டெழ புதிய மூலதன உட்பாய்ச்சல் அசியமாகும். அதற்காக உருவாக்கப்படும் பின்புலத்தை சீர்குலைக்கவே எதிரணியினர் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 04/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை