மியன்மாரில் கைதான 12 மீனவர்கள் 3 மாதங்களின் பின் விடுவிப்பு

மியன்மாரில் கைதான 12 மீனவர்கள் 3 மாதங்களின் பின் விடுவிப்பு-12 Sri Lankan Fishermen Detained in Myanmar Released

மியன்மார் கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் சுமார் 3 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி, சீரற்ற காலநிலை காரணமாக மியன்மார் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்ட குறித்த மீனவர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இக்கால இடைவெளியில் அங்கு ஏற்பட்ட இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை காரணமாக, மீனவர்களின் விடுதலை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் சிக்கல்கள், இழுபறி நிலைகள் நிலவி வந்தன.

அத்துடன், மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகமானது, மீனவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அதிக தூரத்தில் காணப்பட்டதால், மீனவர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளில் பல்வேறு சிக்கல்கள் நிலவியதாக, மியன்மாரிலுள்ள இலங்கைக்கான தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த விடயத்தில் அசிரத்தையாக இருப்பதாக தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில், பேராசிரியர் நளின் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்ததோடு, இணைய வழியில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மாநாடு மற்றும் மீனவர்கள் பிரச்சினை நிறைவடையும் வரை தான் மியன்மாரில் தங்கியிருக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி சாகர குமார-04 எனும் படகு சிலாபம், மாரவிலவைச் சேர்ந்த 7 மீனவர்களுடனும், ஜனவரி 27ஆம் திகதி மயோமி எனும் படகு 5 மீனவர்களுடனும் பல நாள் ஆழ் கடல் மீன்பிடி நடவக்கைக்காக, திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்றிருந்த நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக, குறித்த படகுகள் மியன்மாரை நோக்கி அடித்துச் செல்லப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்தே அந்நாட்டு படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த இரு படகுகளிலும் சென்ற மீனவர்களின் உறவினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்களின் விடுதலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, மியன்மாரிலுள்ள இலங்கைத் தூததரகம் அறிவித்துள்ளதுடன், அவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Sun, 04/18/2021 - 16:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை