அரச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசினால் தீர்மானிக்கப்பட்ட ரூ.1,000 சம்பளம்

வழங்கப்படவில்லையெனும் எதிரணியின் கூச்சலுக்கு செந்தில் பதிலடி

அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள அனைத்து பெருந்தோட்டங்களிலும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்ட 1,000 ரூபா நாட் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஆலோசகரும் முன்னாள் ஊவா மாகாணசபை அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அரசாங்க பெருந் தோட்டங்களில் கூட 1,000 ரூபா சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையென எதிர்க்கட்சியினர் மேற்கொண்டுவரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 16 தோட்டங்களில் 1,000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் ஏனைய அனைத்துக் தோட்டங்களிலும் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே நடைமுறையிலிருந்த 750 ரூபாய் சம்பளமே தற்போது 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதால் ஆயிரம் ரூபா சம்பளம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். அதை விடுத்து 1,000 ரூபா சம்பளம் வழங்குவதென்றால் மேலதிக கொழுந்து பறிக்க வேண்டும் என கம்பனி கள் கோர முடியாது என்றும் அந்த கோரிக்கையை தொழிற்சங்க ரீதியில் முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டதாக பலரும் தெரிவித்து வந்தாலும் அது இரத்துச் செய்யப்படவில்லை என்றும் அதிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்றும் தெரிவித்தார், அதனூடான அனைத்து சலுகைகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறிமல் விஜேசேகரவும் கலந்துகொண்ட மேற்படி செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளித்த செந்தில் தொண்டமான்; தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கிணங்க ஏற்கனவே 750 ரூபாவாக இருந்த நாள் சம்பளம் ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ்வரும் 16 தோட்டங்களில் மார்ச் மாதத்திற்கான சம்பளம் 1,000 ரூபாய் நாட்சம்பளம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள தோட்டங்களிலேயே இந்த 1,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

சில தோட்டங்கள் 1,000 ரூபா சம்பளத்தை வழங்குவதை முறியடிப்பதற்காக பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு வருகின்றன. 1,000 ரூபா சம்பளத்திற்காக மேலதிக கொழுந்து பறிக்க வேண்டும் என்று அந்த கம்பனிகள் கூறுகின்றன. எனினும் 1,000 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு அவ்வாறு மேலதிக கொழுந்து பறிக்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை காரணங்காட்டி ஒருபோதும் அவற்றை நிறுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் அரசு பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறிமல் விஜேசேகர விளக்கமளிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும் நன்மை கிடைத்து வரும் நிலையில் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிய தோட்டங்கள் தற்போது இலாபம் ஈட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2019 காலங்களில் பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கு 329 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தற்போதைய நிர்வாகத்தின் மூலம்149 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 04/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை