1,000 ரூபா சம்பள அதிகரிப்புடன் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும் புதுவருடம்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து

இலங்கை தேசத்து மக்களின் இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியும், உள்ளங்கள் தோறும் நிம்மதியும் நிலைபெறும் ஆண்டாகவும் இந்த பிலவ வருடமானது அனைத்து உள்ளங்களும், சந்தோஷமடைந்து இலங்கைத்தாய் மனம் திருப்தி கொள்ளும் இனிய வரத்தை இந்த சித்திரைப் புத்தாண்டு தந்தருளட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது சித்திரைப்  புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும், சவால்களை சந்திக்கின்ற போதும் அவர்களை அரணாகக் காத்து நின்று துயர்களையும், துடைத்து பாதுகாத்து வந்திருக்கின்றோம். இந்த வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும்.

இதன் காரணமாகவே தெளிந்த சிந்தனையோடும், கொள்கைப்பற்றோடும் மக்கள் அனைவருக்கும் சலுகைகள், உரிமைகள், வசதி வாய்ப்புக்கள், அத்தனையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியத்தாலும், போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் மறந்துவிட முடியாது. இப்புதிய ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வுடன் தோட்டங்கள் தோறும் சந்தோஷமாக புத்தாண்டை இம்முறை கொண்டாடுவதற்கு வழிசமைத்துள்ளது.

மலையக சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு இ.தொ.கா. அனைத்து வகையிலும் கைகொடுக்கும் என்பதை இப் புத்தாண்டில் தெரிவித்துக்கொள்கின்றோம். மலையக வரலாற்றில் இவ்வருடம் முக்கியத்துவம் வாய்ந்தது. 82ஆவது ஆண்டைக் கடந்து பயணிக்கவுள்ள இந்த வருடமானது நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும், மலையக மக்களின் தேவைகளிலும் அவர்களது முயற்சிகளிலும் நாம் என்றும் கைகொடுப்போம். இப்புதிய பிலவ ஆண்டில் மலையகமெங்கும், மலர்ச்சி பரவட்டமெனவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Wed, 04/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை