மலையகத்துக்கான 10,000 வீடுகள் திட்டம் இரண்டு வாரங்களில் ஆரம்பம்

மலையக பிரதேசங்களில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.  

வீடமைப்பு திட்டங்களுக்காக இதுவரை அரசாங்கத்திடமிருந்து 592மில்லியன் ரூபா கிடைத்துள்ள நிலையில் மேலும் 1057மில்லியன் கிடைக்கவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.  

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேர்தல் காலங்களில் புதிய கிராமங்களை அமைப்பதாக கூறி ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் அரைகுறை நிலையில் உள்ள நிலையில் அவற்றை முழுமையாக நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனத்தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேர்தல் முன்னெடுப்புகள் இடம்பெற்ற நவம்பர் மாதமளவிலேயே மக்களை ஏமாற்றுவதற்கான இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.   நேற்றையதினம் கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே, இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

தோட்ட வீடமைப்பு திட்டங்களுக்கு மேலாக, அனர்த்த முகாமைத்துவ துறையினரால் சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தீ அனர்த்தம் உள்ளிட்ட அனர்த்தங்களுக்குள்ளான வீடுகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எமது அமைச்சு மேற்கொண்டுள்ளது. அதேவேளை, நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளின் பூர்வாங்க செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/06/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை