எத்தியோப்பிய, சோமாலிய மோதல்களில் 100 பேர் பலி

எத்தியோப்பியாவின் அபார் மற்றும் சோமாலியா பிராந்தியங்களுக்கு இடையே இடம்பெற்ற எல்லை மோதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் செவ்வாய்க்கிழமை வரை நீடித்த இந்த மோதல்களில் கால்நடை மேய்ப்பாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அபார் பிராந்திய பிரதிப் பொலிஸ் ஆணையாளர் அஹமது ஹுமத் ரோயட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களுக்கு சோமாலிய பிராந்திய படை மீது அவர் குற்றம்சாட்டினார்.

மறுபுறம் கடந்த வெள்ளிக்கிழமை 25 பேர் கொல்லப்பட்டதாகவும் அதே படை செவ்வாய்க்கிழமை நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் மேலும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் சோமாலிய பிராந்தியத்தின் பேச்சாளர் அலி பெதேல் தெரிவித்துள்ளது.

சோமாலியா மற்றும் அபார் பிராந்தியங்கள் உரிமை கோரும் பகுதியில் நீடிக்கும் வன்முறைகள் பெரும் பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

எத்தியோப்பியா இனரீதியில் 10 சுயாட்சி பெற்ற பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களுக்கு இடையிலான நிலம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் வன்முறைக்கு இட்டுச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/08/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை