பாராளுமன்றில் அமைதியின்மை; விசாரணைக்கு 07 பேர் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய 07பேர் கொண்ட விசேட குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். 

இதேவேளை ஆளும் கட்சியின் எம்.பியொருவர் மீது எதிர்க்கட்சியினர் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று நேற்றைய தினம் சபை முதல்வர் தினேஸ் குணவர்தன சபாநாயகரிடம் வலியுறுத்தினர். 

அதன்போது தினேஸ் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கும் முரணான வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எதிர்க்கட்சியினர் அவ்வாறான வசனங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை சபைக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். அவற்றை பாதுகாப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தி அந்த சுலோகங்களில் இருந்த விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன். 

இதேவேளை, பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ ஹெட்டியாராச்சி மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தில் நுழைவாயிலுக்கருகில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதேவேளை பாரளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். 

இது தொடர்பாக கவனம் செலுத்திய சபாநாயகர் இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றை அமைத்து நடவடிக்கையெடுக்கப்படும் என்று அறிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

Fri, 04/23/2021 - 07:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை