MCC உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடாது

- சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு 

அமெரிக்க மில்லேனியம் சேலன்ஞ் கோப்பரேசனுடனான   (MCC) உடன்படிக்கை மற்றும் 'ஷோபா'  உடன்படிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மிலேனியம் சேலன்ஞ் கோப்பரேசனுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சில தரப்பினர் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கிணங்க  பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, ஏ, எச். எம். டி.நவாஸ் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேற்படி வழக்கு நேற்று விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்சானா ஜமீல் நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைத்தார்.

அதன்போது அமெரிக்க மில்லினியம் சேலஞ்ச் கோப்பரேஷன் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

அதேவேளை அத்தகைய உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க மிலேனியம் சேலென்ஞ் கோப்பரேஷன் நிறுவனம் அதன் தீர்மானத்தை வெளியிட்டிருந்ததையும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதேபோன்று 'ஷோபா'  உடன்படிக்கையை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்பதையும்  அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதிகள் குழாம் மேற்படி வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் அன்றைய தினத்தில் மேற்படி விடயம் தொடர்பில் எழுத்துமூல  அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க மில்லினியம் சேலன்ஞ் கோப்பரேஷன் நிறுவனத்தினுடனான உடன்படிக்கை மற்றும் 'ஷோபா' உடன்படிக்கை ஆகியவற்றில் அரசாங்கம் கைச்சாத்திடுவதை  தடுக்குமாறு கோரியே மேற்படி மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/23/2021 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை